Environmental day celebration

Environmental day celebration

 

ஜூன் 05.. உலக சுற்றுச்சூழல் தினம் - இயற்கையை காப்போம்.!

திருக்குறள்;
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்

பொருள்;
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.

புவியையும் அதன் இயற்கைத் தன்மையையும் காக்கும் பொருட்டு, உலகளாவிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவே கடந்த 1972 ஆம் ஆண்டு ஐ.நா சபையால் துவங்கிவைக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது. நாம் வாழ்ந்து வருகிற புவி குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் சிறிதேனும் நாம் சிந்தித்திடாத காரணத்தால்தான் ஐ.நா சபையால் இம்மாதிரியான முயற்சி எடுக்கப்பட்டது.

முதலில் மனிதனுக்கு மட்டுமானதல்ல இந்த உலகம் என்பதனை நாம் முழுமையாக உணர்ந்துகொள்ளல் வேண்டும். மாறாக சிறு சிறு சீவராசிகளுக்கும் ,புல் பூண்டுக்கும் சொந்தமானது இந்த உலகம்.

இதனை மறந்து தனது நலனுக்காக தொழிற்சாலைகள், அறிவியல் தொழில்ஙட்பங்களைக் கொண்டு என்று இயற்கையின் வளங்களை மனிதன் அதிகப்படியாக சுரண்டத் துவங்கினானோ, அப்போது மாறத்துவங்கியவைதான் இயற்கையின் காலநிலைகள் இதன் காரணமாகவே உலகு முழுமைக்கும் சுனாமி, நிலநடுக்கம் எரிமலைச் சீற்றம் பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் அரங்கேறிவருகின்றன.

நகரமயமாக்கல் எனும் பெயரால் மரங்கள் அழிக்கப்பட்டதன் காரணமாகவே புவி வெட்பமயமாதல் உள்ளிட்ட புவிக்கு பாதகமான செயல்கள் அரங்கேறுகின்றன.

உயிர்க்காற்று ஆக்சிசனை வெளியிட்டு Co2வினை உள்ளிழுத்துக்கொள்ளும் தாவரங்களை நாம் அதிகப்படியாக வெட்டி விட்டதன் காரணமாகவே, இங்கு வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சுக்காற்றுகள் வளிமண்டலத்தை தாக்கி ஓசோன் படலத்தில் ஓட்டை விழச் செய்யும் அளவுக்குச் சென்று விட்டது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் உலகில் 0.5% நீர் மட்டுமே குடிப்பதற்கு உகந்தது என தெரியவருகிறது. ஆயினும் நாம் நதிகள்,ஏரி குளம் குட்டைகளையெல்லாம் தூர்வாராமல் விட்டு விட்டு கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கு குளிர்பான வியாபாரத்திற்காக நிலத்தடி நீரையும் ஆறுகளையும் உறிஞ்ச அனுமதியளித்து வருகிறோம்.

போதிய நீர் வரத்து இல்லாமல் நிலத்தடிநீர் ஆதரமும் இல்லாமல் விவசாயம் அறுகிப்போய் விட்டது. விவசாயிகளின் நட்பு உயிரினமான மண்புழு, வெட்டுக்கிளி சிட்டுக்குருவி உள்ளிட்டவை தொலைந்தே போய்விட்டன.

அதிகப்படியாக ஆற்று கடல் மணலை வாரிக்குவிக்கிற காரணத்தால் கடல் நீர் உட்புக துவங்குகிறது. ஆறு குளங்களை அழித்து வீடுகள் கட்டினால் பெருமழையின் போது அவை மூழ்கிப்போய் நிற்கின்றன.

நாகரீகம் எனும் பெயரால் துணிப்பைகளை தவிர்ந்து நெகிழிகளை பயன்படுத்துகிறோம்.அவை நெடுநாட்களுக்கு அழியாமல் மழைநீரையும் மண்ணிற்குள்ளாக ஊடுறுவிச் செல்லவிடாமல் தடுக்கின்றன. காடுகளை அழித்து வாழ்விடமற்றவைகளாக விலங்குகளை ஆக்குகிறான். ஆக, இப்படியாக இயற்கைத்தாயின் அத்துணை வளங்களையும் மனிதனே சிதைத்துப்போடுகிறான்.

புவி பெருமளவில் அதன் இயற்கைத்தன்மையை இழந்துபோகக் காரணம் மனிதனே.

நமது சந்ததிகளுக்கு வேறு எதனையும் தவிர்த்து இயற்கையோடு இயைந்த புவியை கையளித்துவிட்டுச் செல்வோம்.

இனிய சுற்றுச் சூழல் தின வாழ்த்துக்கள்.

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close