இதற்கு பெயர் பொட்ட காடு அல்ல. வறள் புல்வெளி காடுகள் (Dry grass land). மழைக்காலங்களில் பசுமை காட்டியும், கோடைகாலங்களில் வறண்டும் காணப்படும் சமவெளி காடுகளின் ஒரு பகுதிகள். ஏதோ, வெள்ளைக்காரன் அவனுக்கு உதவாத பகுதிகளை Waste Land என்று எழுதிச் சென்றான் என்றால், இங்கே உள்ள முட்டாள்களும் அதையே பின் பற்றி இவற்றை பொறம்போக்கு நிலம், தரிசு நிலம், வானம் பார்த்த பூமி என்று மனிதப் பார்வையிலேயே இதற்கு பெயர்கள் வைத்து மொத்த, மொத்தமாக விழுங்கி கொண்டு உள்ளார்கள்.
உண்மையில் இந்த பகுதிகளை சுற்றி ஒரு பெரும் பல்லுயிர் சூழலே இயங்குகிறது. ஆயிரக்கணக்கான பூச்சி வகைகள், நூற்றுக்கும் அதிகமான இருவாழ்விகள், ஊர்வன, கொறிக்கும் விலங்குகள், பறவைகள் என உள்ளன. மனிதப் பார்வையில் போடப்படும் திட்டங்களும், செயல்களும் இந்த பல்லுயிர்களின் வாழ்வின் ஆதாரத்தை அழித்து அவைகளை இல்லாமல் போகச் செய்யும். இயற்கை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உருவாக்கிய இந்த இணைப்புச் சங்கிலிகள் ஒரே நேரத்தில் இப்படி அறுக்கப்பட்டால் அதன் பின் விளைவுகளுக்கு மனிதனால் பதில் சொல்ல இயலாது. இது போன்ற பகுதிகளை சார்ந்து வாழ்ந்த வெளிமான்கள், கானமயில்கள், வரகுக்கோழிகள், கழுதைப்புலிகள், நரிகள் இன்று நம்மிடையே இல்லாமலே போய் விட்டன.
இன்றைக்கு மயில்களாலும், மான்களாலும், காட்டுப் பன்றிகளினாலும், எலிகளினாலும் விவசாய மக்கள் பெரும் தொல்லையை சந்தித்து வருவதற்கு காரணம், வறள் புல்வெளி காடுகள் அழிக்கப்பட்டு இப்பகுதிகளை சார்ந்த பாம்புகளும், கொல்லுண்ணி விலங்குகளும் இல்லாமல் போனதே. இதோ, படத்தில் நீங்கள் காணும் பூனைப் பருந்து ஒவ்வொரு பனிக்கால துவக்கத்திலும் ஆயிரம் மைல்கள் கடந்து இப்பகுதிகளை ஆண்டு தோறும் வந்து சேர்க்கிறது. விருந்தினரை போற்றி, உபசரித்த தமிழ் மக்கள் இன்று தங்களின் இயற்கை உறவுகள் எதுவென்றே தெரியாமல்அவற்றின் வாழ்விடத்தை அழித்து வாழ்வது வேதனை அளிக்கிறது.
Article & Photo: Raveendran Natarajan, Madurai.
No. of Trees Planted