ஊரே அடங்கி கிடக்கும் இந்த வேளையில், ஒரு பறவை ஆர்வலர் ஆன என்னை அலைபேசியில் தொடர்பு கொள்ளும் நண்பர்கள் எல்லாமே சொல்லும் செய்தி... சார், இப்போ நிறைய பறவைகள் பார்க்கிறேன், எப்போதும் பறவைகள் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஊரடங்கு மேற்கொண்ட இருபது நாளில் பெரிய மாற்றம் என்று வியக்கிறார்கள். இதற்கு பதிலாக நான் சிரித்துக் கொண்டே சொல்வது... நண்பரே, நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போதுதான் உங்களின் கண், காது, மூளை இணைந்து செயல்படுகிறது... வேறு அதிசயம் ஏதும் நிகழவில்லை என்று . உண்மையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இயற்கையின் மேல் மனிதன் தொடர்ந்து தொடுத்து இருக்கும் வன்முறைகளுக்கு ஊரடங்கு மேற்கொண்ட இருபது நாளில் பெரிய விடிவுகாலம் ஏதும் பிறந்துவிடாது. அப்படி என்றால் இப்போது ஊரடங்கில் பறவைகள் பெருக்கம் உண்மையா? இல்லையா? பறவைகள் பலவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஓசை எழுப்பி துடிப்பாக திரிகிறதே அதன் காரணம் என்ன? வாருங்கள் அது பற்றி விரிவாக காண்போம்.
இந்தியாவில் கிட்டத்தட்ட ஆயிரத்து இருநூறு வகை பறவைகள் உள்ளன. இவற்றில் முப்பது சதவிகித பறவைகள் ஆண்டு தோறும் வெளிநாடுகளில் இருந்து வலசை வந்து விட்டு கோடை துவங்கியவுடன் தங்களின் தாயகத்திற்கு இனப்பெருக்கம் செய்ய திரும்பிவிடும். பொதுவாக பறவைகளின் வலசை காலம் என்பது நமது தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவ மழை காலமான அக்டோபர் மாதம் துவங்கும். இந்த கால கட்டத்தில் உலகின் வட பகுதிகள் அனைத்தும் பனி மூடி விடுவதால் அப்பகுதியில் உள்ள பறவையினங்கள் தங்களின் உணவு தேவைகளுக்காக வெப்ப மண்டல நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுக்கு பெரும் எண்ணிக்கையில் வலசை வருகின்றன. அவ்வாறு வலசை வந்த பறவைகள் அனைத்தும் பிப்ரவரி மாத இறுதியில் இருந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் தங்களின் இனப்பெருக்கத்துக்காக தாய் மண்ணுக்கு திரும்ப துவங்கி விடும். உணவு தேடலுக்காக சிறு சிறு குழுக்களாக பிரிந்த சோள குருவிகள், தகைவிலான் குருவிகள், காட்டு வாத்தினங்கள், மண் கொத்திகள், உப்புக்கொத்திகள், உள்ளான் போன்ற பறவையினங்கள் அனைத்தும் பெரிய பெரிய குழுக்களாக இணைந்து வலசை திரும்புதல் நிகழ்த்தும். எனவேயும் கடற்கரை மாவட்டங்கள், நீர் பிடிப்பு பகுதிகள் அனைத்திலும் பெரும் எண்ணிக்கையில் இந்த பறவைகளை இப்போது காணலாம். இந்த நிகழ்வுகள் அனைத்தும் நமது காலநிலை மாற்றங்களை பொறுத்து ஆண்டு தோறும் நடக்க கூடிய ஒரு இயல்பான விஷயம்தான்.
மேலும் நம் வாழ்விட நீர் பறவைகளான சங்குவளை நாரைகள், கூழைக்கடா, நத்தை கொத்தி நாரைகள், அன்றில் பறவைகள், வெண்கொக்குக்கள், வக்கா, குருகுகள், நீர்காகங்கள் எல்லாம் நவம்பர் மாதத்தில் இருந்து கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்க துவங்குகின்றன . இந்த குஞ்சுகள் அனைத்தும் முழு வளர்ச்சி அடைந்து மார்ச் மாத துவக்கத்தில் இருந்து கூடுகளை விட்டு வெளியேற துவங்கும். அப்போது சுமார் ஐநூறு பறவைகளாக கூடு கட்டப்பட்ட ஒவ்வொரு சரணாலயங்களில் இருந்தும் கூட்டிற்கு மூன்று குஞ்சுகள் என்ற விகிதத்தில் பார்த்தாலும் சுமார் இரண்டாயிரம் பறவைகளாக வெளியேறும். சென்ற ஆண்டு இராமநாதபுரம், கோவை, சிவகங்கை, காஞ்சிபுரம், நாகை மாவட்டங்களில் நல்ல மழை பெய்ததால் கண்மாய், ஏரிகளில் நீர் நிறைந்து நமது நீர் பறவைகளின் இனப்பெருக்கம் மிகச் சிறப்பாக இருந்தது. வெளிநாட்டு பறவைகளின் வலசை , உள்நாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக கூடுகள் கட்டுவதை வைத்தே முன்னர் விவசாயிகள், மீனவர்கள் போன்ற எளிய மக்கள் கால நிலையை , பயிர் செய்ய வேண்டிய நேரங்களை, மீன் பிடிக்க செல்லும் நாட்களையும் கணிப்பார்கள். இப்போது எல்லாவற்றுக்கும் அறிவியல், தகவல் தொழிநுட்பங்களை மக்கள் நாட ஆரம்பித்த பின் இயற்கை மற்றும் சூழல் மாற்றங்களை பற்றிய அறிவு மக்களிடம் இருந்து அழிந்துவிட்டது.
மேலும், நமது வாழ்விட பறவைகளான காகம், சிட்டுக்குருவி, குயில், மைனா, கதிர்குருவிகள், தையல் சிட்டு போன்ற பறவைகள் மார்ச் மாதம் துவங்கி மே மாதத்திற்குள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இனப்பெருக்க காலங்களில் ஆண் பறவைகள் பெண் பறவைகளை கவர வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து அழைக்கவும், இசைக்கவும் துவங்கும். எனவே இந்த காலகட்டங்களில் பறவைகளின் சப்தங்கள் எப்போதும் இருப்பதை விட கூடுதலாக இருக்கும். இப்போது போக்குவரத்து வாகனங்கள் தடை செய்யப்பட்டு , தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்ட நிலையில் நகரங்களின் இரைச்சல் முழுவதும் குறைந்து ஒலி மாசு கட்டுக்குள் வந்துள்ளதால் நமக்கு பறவைகளின் சப்தங்கள் பலவும் தெளிவாக கேட்கின்றன.
அப்படியானால் இந்த ஊரடங்கினால் எந்த சூழல் மாற்றமும் ஏற்படவே இல்லையா என்றால் மாற்றங்கள் சில நேர்ந்துள்ளன என்றே சொல்வேன். வாகனங்கள் , தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தால் கார்பன் புகை மாசு குறைந்து காற்று தூய்மையாக உள்ளது. இரைச்சல்கள் குறைந்து ஒலி மாசு கட்டுக்குள் வந்துள்ளது. வாகனங்களின் பிரகாசமான முகப்பு ஒளி விளக்குகளினால் சாலையில் அடிபட்டு இறக்கும் பறவைகள், விலங்குகளின் இறப்புகள் தவிர்க்கப் பட்டுள்ளன. மனித நடமாட்டம் குறைந்த காரணத்தால் பறவைகள், விலங்குகள் மிக தைரியமாக வெளிகளில் திரிகின்றன. பல மனிதர்களுக்கும் இப்போதுதான் தங்களின் இயந்திர வாழ்க்கையை மறந்து அக்கம், பக்கம் உள்ள நல்லது கெட்டதை பொது சிந்தனையில் கவனிக்க துவங்கியுள்ளனர். வீட்டுக்குளேயே அடைபட்டு கிடப்பது பலருக்கும் மன அழுத்தத்தை தரும் என்பதால் இறகுகள் - அம்ரிதா இயற்கை அறக்கட்டளை மற்றும் பொதிகை சாரல் என்ற அமைப்பும் இணைந்து இயற்கை மற்றும் நமது சுற்று சூழல் பற்றிய தெளிவான புரிதலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிமையாக புரிந்து கொள்ள இணையத்தின் மூலம் தினமும் இரவு 7 மணிக்கு சந்திக்கிறோம். இந்த சந்திப்பில் நமது பறவைகள், காட்டுயிர்கள், வனங்கள் பற்றிய பல செய்திகளை பகிர்ந்து வருகிறோம். நமது வாசகர்களுக்கு எங்களுடன் இணையத்தில் இணைய விருப்பம் இருப்பின் 98431 36786, 99620 86565 என்ற எண்களை தொடர்புகொள்ளுங்கள்.
இறகுகள் - அம்ரிதா இயற்கை அறக்கட்டளை.
Share :
Tags :