இங்கு பல பறவையினங்கள் இருந்தாலும் இரவாடியான கொம்பன் ஆந்தையே முதன்மையான பறவையாகப் பார்க்கப்படுகிறது. வலுவான கால்கள், இரவிலும் ஊடுருவிப் பார்க்கும் திறன் கொண்ட கண்கள், இரையை வீழ்த்தும் திறன் பெற்ற நகங்கள், பலம் பொருந்திய அலகுகள் என தனது வேட்டைத் திறனைக் கொண்டு, தங்களைவிட பலத்தில் வலிமையான இரையைக் கூடப் பிடிக்கும் திறன் கொண்டிருப்பதால் கொம்பன் ஆந்தைகள், வான்வெளியின் புலிகளாகக் கருதப்படுகின்றன.
56 செ.மீ. - குண்டான தோற்றம் கொண்ட இது பழுப்பு நிறமான உடலில் வெளிர் மஞ்சளும் நல்ல பழுப்புமான கோடுகளையும் புள்ளிகளையும் கொண்டது. பெரிய வட்ட வடிவமான ஆரஞ்சு நிறக் கண்களையும் தலையில் கருப்பு நிறத்தில் விறைத்து நிற்கும் கொம்புகளையும் கொண்டது. கண்கள் உருண்டு, பெரியதாக, மஞ்சள் நிறத்தில் காணப்படும்,ஊர்ப்பருந்தை விட சற்று பெரியதாக காணப்படும் பெரிய ஆந்தைகள் இவை.
தமிழகம் எங்கும் புதர் நிறைந்த பாறைகளோடு கூடிய மலைப்பக்கங்கள், காடுகள், பெரிய மாமரங்கள் வளர்ந்து நிற்கும் தோப்புகள் ஆகியவற்றில் காணப்படும் இது மாறாப் பசுங்காடுகளையோ நீரில் வளம் இல்லாத வறள் காடுகளையோ சார்ந்து திரிவதில்லை. பகலில் மறைந்திருக்கும் பாறை இடுக்குகளிள் வாழும்.
கொம்பன் ஆந்தைகள் முக்கியமாக சுண்டெலி எலிகளையே உண்டாலும் பாம்புகள், தவளைகள் போன்றவற்றோடு வண்டுகள் போன்ற பூச்சிகளையும் உண்ணுகின்றன.கூகையைப் போலச் சூரிய வெளிச்சத்தைக் கண்டு மிரளாது.
பொதுவாக கொம்பன் ஆந்தைகள் நவம்பர் முதல் மே வரை மழைக்காலம் முடியும் தருவாயில் முட்டையிடுகின்றன. இவை கூடுகள் ஏதும் கட்டுவதில்லை. புதர் ஓரமான குழிகளிலும் மண்மேடுகளின் மீதும், நிழல் கவிழ்ந்த பாறைகளின் மேல் முட்டையிடுகின்றன. சில நேரங்களில் பெரிய புதர் அல்லது மரத்தின் கீழேயோ கூட முட்டையிடும் என்று ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இனப்பெருக்க காலத்தில் கொம்பன் ஆந்தைகள் மிகவும் மூர்க்கமாக முட்டை இட்டுள்ள பகுதியைப் பாதுகாக்கும். ஒரு ஆந்தை அடைகாக்கும் வேளையில் மற்றொரு ஆந்தை அருகில் உள்ள மரத்திலோ அல்லது பாறையிலோ அமர்ந்து காவல் இருக்கும்.வைரி போன்ற பறவைகளோ அல்லது மனிதர்களோ முட்டைகள் உள்ள பகுதியை அணுகும்போது தற்காப்பிற்காகத் தாக்க முற்படும்.
கொம்பன் ஆந்தைகள் 4 முட்டைகள் வரை இடும் என்றும், சிலசமயங்களில் 2 அல்லது 3 தான் இடும் என்றும் சாலிம் அலி குறிப்பிட்டுள்ளார். எல்லா முட்டைகளும் ஒரே நாளில் இடப்படுவதில்லை. ஒருநாள்விட்டு ஒரு நாள் அவை முட்டையிடுவதால், குஞ்சுகள் வெவ்வேறு வளர்ச்சி நிலையில் இருப்பதை கண்டு அறியலாம். சுமார் 33 அல்லது 35 நாட்களில் வெளிவரும் குஞ்சுகள் 6 மாத காலத்திற்கு பெற்றோரை நம்பியே வாழ்கின்றன.
Photo : இரவீந்திரன் நடராஜன்,
No. of Trees Planted