உலக பல்லுயிர் பெருக்க நாள் (World Biodiversity Day) தற்போது ஒவ்வோர் ஆண்டும், மே 22 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் உயிரியற் பல்வகைமையை பரப்பும் நோக்கோடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய சூழ்நிலையில் பல மில்லியன் உயிரினங்கள் இப்புவியில் வாழ்கின்றன. இந்த உலகிலே, பல வடிவங்களிலும், அளவுகளிலும் உயிரினங்கள் வாழுகின்றன. திமிங்கிலங்கள் போன்ற மிகப் பெரிய உயிரினங்களும், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும் உள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பவைகள், முதல் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழுகின்ற உயிரினங்கள் வரை உள்ளன. சுட்டெரிக்கும் பாலைவனங்களில் உயிரினங்கள் வாழுகின்ற அதேவேளை, பனிபடர்ந்த கடுங் குளிர்ப் பிரதேசங்களிலும் அவை காணப்படுகின்றன. உணவு முறைகள், வாழிடங்கள் போன்ற பல்வேறு அம்சங்களில், கணக்கற்ற வகையில் வேறுபடுகின்ற ஏராளமான உயிரினங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டனவாக இப்புவியில் வாழ்ந்து வருகின்றன. உயிரியற் பல்வகைமை இவையனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
நாம் உண்ணும் உணவில் 80 சதவீதம் இந்த உலகில் வாழும் தாவரங்களையும், விலங்குகளையும் சார்ந்து தான் இருக்கின்றன. நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காக்கும் மருந்துகளில் முக்கியப் பங்கு வகிப்பது இந்த உயிரினங்களில் இருந்து பெறப்படும் பொருட்கள் தான். இருப்பிடங்கள் மற்றும் ஆடைகள் உருவாக்குவதற்கும் தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வாறு நமக்கு இன்றியமையாத பொருட்களான உணவு, உடை, உறவிடம் என்ற காரணிகளுக்கு நாம் பல்லுயிர்களைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. பல்லுயிர் பெருக்கம் இயற்கையாக கண்ணுக்கு தெரியாமல் நடைபெறும் பல பணிகளை செய்கின்றது. வளி மண்டலத்தில் நடைபெறும் வேதியியல் மற்றும் நீர் சுழற்சிகளை சமன்படுத்துகிறது. நீரை தூய்மை படுத்துதல்(மீன்கள்) மற்றும் மண்ணில் சத்துகளை மறுசுழற்சி செய்து(மண்புழு) வளமான நிலத்தை கொடுக்கிறது. பல்வேறு ஆய்வுகளின் படி இப்படிப்பட்ட இயற்கையான சூழ்நிலையை நம்முடைய அறிவியல் வளர்ச்சியின் மூலம் அமைத்து கொள்ள முடியாது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த உயிரியல் ஆதாரங்களை அழியாமல் பாதுகாப்பதுக்கு உலக அளவில் முக்கியத்துவம் தரப்படுகிறது.
Share :
Tags :